Viboothi - திருநீறு/விபூதி
- Nov 9, 2017
- 3 min read
அபிஷேகப்ரியனான, பரமேச்வரன் விபூதி ப்ரியனும் ஆவான்.
‘காடுடைய சுடலைப் பொடி பூசி’ என்று தேவாரத்தின் முதல் பாட்டிலேயே ஞான ஸம்பந்தக் குழந்தை சொல்லியிருக்கிற மாதிரி, ஸ்வாமி இட்டுக் கொள்வது ச்மசான (மயான)த்தில் சவங்களை எரித்துப் பெறுகிற பஸ்மாவே.
ஆனாலும் நாம் விபூதி தயாரித்து அவனுக்கும் இட்டுவிட்டு, அபிஷேகங்கூடப் பண்ணி, நமக்கும் இட்டுக் கொள்கிறோமே, அது எங்கேயிருந்து வருகிறது?
கோமய உருண்டைகளைப் புடம் போட்டுத்தான் விபூதி பண்ணுவது. விபூதியைவிடப் பவித்ரமாக ஒன்று கிடையாது.
ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளின் ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்றுப் பதிகத்தைப் பார்த்தால் போதும், அந்தத் திருநீற்றுக்கு என்னவெல்லாம் மஹிமை இருக்கிறதென்று தெரியும். ‘பஸ்மஜாபாலோபநிஷத்’ என்றே இருக்கிற உபநிஷத்தில் பரமேச்வரனே கோமயத்திலிருந்து எப்படி விபூதி செய்வது என்று விளக்கமாகச் சொல்லி, அது ஸர்வ பாபங்களையும் போக்கி மோக்ஷம் தருவது என்று சொல்வதாக இருக்கிறது.
கோவின் மலத்துக்கே அப்படிப்பட்ட நிர்மல சக்தி இருக்கிறது.
வெளி மலம், கச்மலம் – ‘கசுமாலம்’ என்று நாட்டு ஜனங்களும் சொல்வதைப் போக்குவதோடு அணு, கர்ம, மாயா மலங்களையும் சேதிப்பதாக கோமயத்திலிருந்து பெறுகிற விபூதி இருக்கிறது.
யஜ்ஞத்தில் நீற்று விழுகிற ஹோம பஸ்மாவை வைஷ்ணவர்களும் மந்த்ர பூர்வமாக தரித்துக் கொள்வார்கள்;
அதில் ஸமித்துச் சாம்பலோடு கோமயத்தாலான வரட்டியின் சாம்பலும் கலந்திருக்கும்.
சுத்தம் செய்து கொள்வதற்கு இரண்டு வழி; ஒன்று ஸ்நானம் பண்ணுவது, இன்னொன்று விபூதி அணிந்து கொள்வது.
ஸ்நானம் செய்வதை ‘நீராடுதல்’ என்றும் விபூதி தாரணத்தை ‘நீறாடுதல்’ என்றும் சொல்லுவார்கள்.
ஸ்வாமிக்கு நீறாட்டலையே நீராட்டலாகி விபூதி அபிஷேகமும் செய்கிறோம்.
தீயதை அகற்றி தீர்வினைக் கொடுத்த ஸ்ரீ சந்ரசேகர மஹாபெரியவா சரணம் சரணம் !!
விபூதி உருவான கதை
நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும்
மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான்.
ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான்.
அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது.
பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது.
இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான்.
இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது. தவத்தை முடித்து கொண்டு சிவவழிபாட்டை தொடங்கினான்.
ஒருநாள் தர்பைபுல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.
ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை.
குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன்தான். சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி, பர்னாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்….!
ரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது.
வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான். “ரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்ட செய்த தாங்கள் நான் வணங்கம் சர்வேஸ்வரன் என்பதை அறிவேன்.
இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா?“ என்று வேண்டினான் பர்னாதன்.
ஈசன் தன் சுயரூபத்தில் காட்சி கொடுத்தார்.
“உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன்.
அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படட்டும்.
உன் நல்தவத்தால் விபூதி உருவானது.
அக்னியை எதுவும் நெருங்க முடியாததை போல விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில்
துஷ்டசக்திகள் நெருங்காது.
விபூதி என் ரூபம்.
அதற்கு நீயும் துணையாக இருந்த வா“ என்று ஆசி வழங்கினார் ..!
சிவபெருமான் விபூதியை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் சேர்த்தெடுத்து மோதிர விரலால் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் கட்டை விரலும் நடுவிரலும் சேர்ந்து விபூதியை எடுக்கக்கூடாது.
கட்டைவிரலாலும் நெற்றியில் விபூதியை வைக்க கூடாது என்கிறது சிவபுராணம் விபூதியால் என்ன நன்மை? என்று ஸ்ரீ ராமர், அகத்திய முனிவரிடம் கேட்டார்.
“பகை,
தீராத வியாதி,
மனநல பாதிப்பு,
செய்வினை பாதிப்பு
இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால்
அந்த பிரச்சனைகள் விலகும்“
என்று அகத்திய முனிவர் ஸ்ரீ ராமருக்கு உபதேசம் செய்தார்.
ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள்.
திரு என்றால் மகாலஷ்மி. அதனால்தான் விபூதியை திருநீறு என அழைக்கிறோம்.
"மந்திரம் ஆவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு
துதிக்கப் படுவது நீறு
வேதத்தில் உள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திரு ஆலவாயான் திருநீறே“
திருநீறு பூசுவதன் மகிமை!
புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தம் அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது.
இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு - தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன.பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்துபோய் எமனிடம் ஓடினார்கள்.
திடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நரகம் பற்றிச் சொன்னார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான். தர்ம சாஸ்திர நெறிகள் ஒரு வேளை நமக்குத் தெரியாமல் மாற்றப் பட்டு விட்டனவா? அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே? என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரிய வில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை.
எனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டர மாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை.
அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன்.
பார்த்தீர்களா திருநீற்றின் மகிமையை...! ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள். ஆகவே நாளும் பூசுவோம் திருநீறு. போற்றி வணங்குவோம் சிவபெருமானை.
சிவாய நம.


Comments